தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் இது. தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.

Tuesday, 17 June 2014

உலகில் எத்தனை மனித உரிமை கூட்டமைப்பு இருந்தும் என்ன பலன்



பாதுகாப்பு தேவை
எனக்கும்
என்னைச் சார்ந்தோருக்கும்,
என் தாய் நாட்டிக்கும்
என் தாய் மொழிக்கும் தான்.

பாதுகாப்பு வேண்டும்.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கும்,
மனித உரிமையாளர்களுக்கும்,
அரசின் கொள்கைகளைச் சான்றிராதோருக்கும்,
சிறு பான்மை இனத்தவர்களுக்கும் தான்.

பாதுகாப்புத் தேடுகிறேன்
என் நாட்டைச் சூரையாடிக் கொன்டிருக்கும்
தலைமையிடம் இருந்தும்,
எங்களால் உயர்த்தப்பட்ட
இரத்தக் காட்டேரிகளிடம் இருந்தும்,
அரசு என்ற பெயரில் கொள்ளையிடும்
குடும்பத்திடம் இருந்தும்
காவல் என்ற போர்வைக்குல் உயிர்களை
சூரையாடும் அதிகாரத்திடமிருந்தும் தான்.

பாதுகாப்பு இல்லை
என் தாய்க்கும் தந்தைக்கும்,
என் உடன்பிறப்புகளுக்கும்,
என் மழலைகளுக்கும்,
என் நாட்டு தேச பக்தர்களுக்கும் தான்.

பாதுகாப்பு உண்டோ
எம் பத்திரிகையாளரின் உயிருக்கு,
எம் போராளிகளின் தேச உண‌ர்விற்கு,
எம் குழந்தைகளின் கற்பிற்கு
எம் மக்களின் பேச்சுரிமைக்கும் தான்.

பாதுகாத்து தாருங்கள்
எம்மைப் பிரிந்த உறவுகளுக்கு,
எம்மிடம் பறித்த சொத்துகளுக்கு.
எம்மிடம் பிடுங்கிய உரிமைகளுக்கு,
எமது தாய் நாட்டுக்கும் தான்

உலகில்
பல மனித உரிமை கூட்டமைப்புகள்
உண்டு.  இருந்தும்
எதற்காக இன்னும்
இலங்கையில்
இத்தனை மனித உரிமை அத்துமீறல்கள்?

Tamilan Pugal






AMMA


Monday, 16 June 2014

இனியவள்

  


பழகியதில்லை 
பேசியதுமில்லை 
படித்திருக்கிறோம் 
இருவரும் ஒன்றாக 

களவுமில்லை 
காதலுமில்லை 
பகிர்ந்திருக்கிறோம் 
பலவற்றை நன்றாக 

அதில் 
இருமடங்காகிய 
இன்பங்களும் உண்டு 
துடைத்தெரியப்பட்ட 
துன்பங்களும் உண்டு 

விதியென வரும் 
காலச் சுழற்சியில் 
கலந்துவிடாமல் 
கடைசிவரை வருவாயோ 
என் அன்பு தோழி !!!


நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

 

பொய் சொல்லவத்தில்லை
உண்மையை மறைத்திருகிறோம்
இதை விட கொடுமை பாதி உண்மை
பேசியிருக்கிறோம் - கொடுமையில்
கொடுமை பாதி உண்மை
பேசுவதுதான் -இதை எல்லாம்
செய்து விட்டு நல்லவனாக
வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!!

@@@@@@
தப்பு என்று தெரிந்து கொண்டு
தப்பு செய்திருக்கிறோம் -ஆனால்
மற்றவர்கள் செய்யாத தப்பையா
நான் செய்கிறேன் என்று
சமுதாயத்தை அடமானம் வைத்து
தப்பு செய்கிறோம் நல்லவனாக
நன்றாக நடிக்கிறோம் .....!!!
@@@@@@@
திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....!!!
@@@@@@
ஊன் உண்ணாதே களவெடுக்காதே
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்
பாடம் - ஆனால் மாமிசம் உண்போம்
பசு கன்றின் பாலை களவெடுத்து
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
என்று வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!
@@@@@@
பிறர் மனம் புண் படும் படி
பேசமாட்டோம் -ஆனால்
அவர் இல்லாத தருணத்தில்
பேசாமல் இருக்க மாட்டோம்
தர்மத்தையும் நியாயத்தையும்
பேசுவோம் - கோயிலில் தர்ம
கத்தாவுடம் வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!

கல்லூரி

கல்லூரி 


வாழ்கையின் 
வண்ணமிகு காலம் 

இன்னல்கள் 
இமயமாய் இருந்தபோதும் 
இறகாய் பறந்த காலம் 

வள்ளுவனின் 
நட்பதிகாரம் சொல்லிய 
நண்பர்களின் காலம் 

விழிகளிலே கதைகள் 
பேசும் ஷாஜகானின் 
காலம் 

வாழ்வில் ஒருமுறை 
வாழ்வோம் 
முடியும் வரை


இதயம் கவிதை

 


அகத்தின்
அழகு முகத்தில்
தெரியும் என்பார்கள் ...
காதலின் அழகும் முகத்தில்
நிச்சயம் தெரியும் ....!!!

நல்ல
இதயங்களில் தான்
தூய்மையான காதல்
இருக்கும் - நம் காதல்
இதயத்தால்
பிணைக்க பட்டது ....!!!
********************
உன்னை நான் ஆயிரம்
தடவை கட்டி பிடித்து
முத்தமிட்டு விட்டேன்
கைகளாலோ உதட்டாலோ
அல்ல - என் இதயத்தால் ...!!!
இத்தனை வலியையும்
தாங்கி என் இதயம்
உன்னை இன்றுவரை
காதலிக்க அதுவே
காரணம் உயிரே ....!!!
*********************
என்
இதயத்தை எடுத்து
வைத்து கொண்டு
உன்னை பிடித்திருக்கிறதா
என்று கேட்கிறாயே ...!!!
உன்
இதயம்
உன்னையும் என்னையும்
பார்த்து சிரிப்பதை
பார்க்கவில்லையா நீ ...!!!
*********************
என்னை விட்டு நீ
பிரிந்தத்தை என் இதயம்
பார்க்கவில்லை
அது துடிக்கும் போது
உன் பெயரை சொல்கிறது ...!!!
ஒருமுறை
என் இதயத்துக்குள்
வந்து விடு என் இதயம்
இன்னும் சில நாட்கள்
துடிக்கட்டும் ....!!!
***********************
நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!
உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!

அன்பு முத்தம்

முத்தம் - நாகூர் கவி



காதலுக்கு 
உயிர்த்துளி...! 

கன்னத்தில் இடும் 
ஒத்தடம்...! 

காதலின் 
வழித்தடம்...! 

இதழ்கள் வாசிக்கும் 
இனிமையான இசை...! 

இதழ்கள் செய்யும் 
இதமானத் தட்டச்சு...! 

வார்த்தைகளற்ற 
வசீகரமான மொழி...! 

காதலர்களின் 
வலி நிவாரணி...! 

இதயம் உள்ளவரை 
இது நிலைக்கும்...! 

இதயம் உள்ளவரை 
இதில் நனைக்கும்...! 

சிபாரிசின்றி கிடைக்கும் 
செல்லப் பரிசு...! 

இன்பத்தின் 
அன்பானத் தழுவல்கள்...! 

இதழ்களின் 
அழகானத் தகவல்கள்...! 

சப்தம் போட்டால் 
இனி யுத்தம் செய்யாதே 
முத்தம் போடு....! 

இனி... 
மொத்தமும் உன்வசம் 
காரணம் முத்தத்தின் சகவாசம்...!

அம்மா



Tuesday, 10 June 2014

ஏமாற்றம்




நான் கேட்டதற்காக 
மூக்கு குத்தியவள் 
கேட்காமலேயே 
காது குத்திவிட்டால்,...

தாயின் வலி தெரியாத காதல்

தவறான 
சாஸ்திரம் 
என்றாலும் 
தவறாமல் 
பார்க்கச் 
சொல்லும் 
பாழாய்ப் போன 
இந்தக் 
காதல்...... 

தேகம் 
தழுவ 
நினைக்கும் 
காதல் 
எல்லாம் 
சோகம் 
தழுவி 
கன்னங்களை 
நனைத்தே 
தீரும்..... 

கல்லறையில் 
சேர்ந்த 
காதலருக்கு 
தெரிவதில்லை 
கருவறையில் 
சுமந்த 
தாயின் 
வலி.....


முகப்புத்தகத்தில் காதல்

முகப்புத்தகத்தில் காதல் ~~ சந்தோஷ் 


ஒரு முகம் 
பலரின் பாவனைகள். 
ஒரு புத்தகம் 
பலரின் பக்கங்கள். 
இணைய உலாவியில் 
இதயங்களை இணைத்து 
மென்பொருள் நரம்புகளில் 
கோலேச்சுகிறது. 
முகப்புத்தகம்.! 

காதல் உணர்வுகள் 
தனிவிடுகை 
தனியறையில் 
பரிமாறப்படுகிறது. 

சில்மிஷ சீண்டல்கள் 
ஸ்மைலி பொம்மை 
பண்டமாற்றங்களில் 
கிளர்ந்தெழுகிறது . 

பரமக்குடி கிராமத்து கட்டழகனுக்கு 
நியூயார்க் தமிழ்தேவதை 
அழகை முகருகிறான். 
சிங்காநல்லூர் சிங்காரி 
சிங்கப்பூர் சிரிப்பழகனின் 
புன்னகையை வாசிக்கிறாள். 

ஊடல் கொண்டாலும் 
முத்த சத்தமிட்டாலும் 
ஊர்மேய்ந்து உலகமேய்ந்து 
உரியவன்(ள்) கணினித்திரையில் 
உரக்கமாய் உருக்கமாய் 
சேதி சொல்லும். 

முகப்புத்தகத்தில் காதல் 
முகவரி கொடுத்தவரும் உண்டு 
முகவரி கெடுத்தவரும் உண்டு. 

முகத்தோற்றத்தில் மயங்கி 
முளைத்த காதலும், 
அகத்தோட்டத்தில் 
உள்ளப்பூக்களாக மலர்ந்த 
உயர்ந்த காதலும் பூக்கும். 


முகமறியாமலே மனம் 
முழுவதையும் தொலைத்து 
காதல்,,ஊடல், என்று 
சகலமும் செளகரியமாய் 
அரங்கேறிவிடும்..... 
உடல் கூடலை தவிர..! 


முகப்புத்தகம்....! 
நட்பு முன்னுரை.! 
காதல் முடிவுரை.! 


காதல் - நாகூர் கவி

காதல் - நாகூர் கவி




எப்பொழுதும் எப்போதும் 
ஆளுங்கட்சி...! 

எதிர்ப்பவர்களுக்கு மட்டும் 
எதிர்க்கட்சி....! 

இதயத் தொகுதியின் 
நிரந்தர வேட்பாளன்...! 

தேவதைகள் தங்கும் 
கூடாரம்....! 

அஹிம்சையான 
இம்சை....! 

விழிகளின் தீப்பொறிக்கு 
இதயங்களை எரிக்கும்...! 

ஒரு இதயத்தால் 
சிறைப்பிடிக்கப்படும்...! 

இரு இதயங்களால் 
விடுதலைப்பெறும்...! 

விழிகளில் மொட்டுவிட்டு 
இதயத்தில் பூக்கும்...! 

வாலிப நெஞ்சங்கள் 
தத்தெடுக்கும் பிள்ளை...! 

தண்ணீராலும் 
அணைக்கமுடியாத தீ...! 

கண்ணிற்கு தெரியாத 
அழகிய கவிதை...! 

விழிகளின் பேச்சுக்கு 
இதயங்கள் செவிகொடுக்கும்...! 

இதயவலி வந்தபிறகும் 
மருத்துவரை அணுகாது...! 

விழிகளை வைத்து 
இதயங்களை கொள்ளையடிப்பது...! 

விழிகளின் தூண்டிலில் 
இதயங்களை சிக்கவைப்பது...! 

உலகம் அறிந்த 
ஊமைப்பிள்ளை...! 

விழிகளால் சலவைசெய்து 
இதயத்தால் அணிவது...! 

இதயத்தில் ஊடுருவும் 
தீவிரவாதி...! 

ஒற்றையடி 
பாதை....! 

இதயத்தின் 
காற்றழுத்த தாழ்வுநிலை...! 

இதயத்தை இலக்காய்வைத்து 
மையம்கொள்ளும் ஒரே புயல்...! 

கண்ணீர் கடலின் 
ஊற்று...! 

வெட்டிப் பயலையும் 
வெற்றிப்புயலாய் மாற்றும் ஆசான்...! 

முத்த கவலைகளை சுமக்கும் 
மொத்த ஏடு...! 

காதலியை கடவுளாய் நினைத்து 
இதயம் இழுக்கும் தேர்...! 

இருள்சூழ்ந்த இதயத்திலும் 
ஒளிவிளக்கைப்போல் மின்னும்...! 

நேசிக்கும்போது கற்கண்டு 
விலகும்போது அணுகுண்டு...! 

அழகிய ஹைக்கூ 
உன்னை விரைவில் ஆக்கும் சைக்கூ....! 

வாலிப கடலையின் 
விதை...! 

திடமான உன்னையும் என்னையும் 
தடயமில்லாமல் ஆக்கும்...! 

விதையில்லாமல் 
வளரும் இதயச்செடி....! 

இதயக்கரையை கடக்காமல் 
அங்கேயே நிற்கும் புயல்...! 

அடியே படாமல் 
அடியேவால் உண்டாகும் வலி...! 

வாழவும் விடாது 
சாகவும் விடாது...!

Relationship



 






Monday, 9 June 2014

இனிய பிறந்தநாள் வாழ்த்து




இனிய நண்பா.....
தாய்க்கு அருமை மகனே
தரணிக்கு வெளிச்சமாய் நீ
தமிழ் மீது கொண்ட பற்று
அளவோடு பேசுவாய் அதி
மதியாய் செயலாற்றுவாய்
முயன்றே பல சாதிக்கிறாய்
வாழ்க பல்லாண்டு நலமாய்
ஏற்ற மிகு வளமாய் சுகமாய்
உனது நட்பால் பெருமையும்
மகிழ்வுமாய் வாழ்த்துகிறேன்

Sunday, 1 June 2014

தங்கைக்கு ஒரு கவிதை





நதியில் விளையாடி 
மணலில் வீடுகட்டியதில்லை. 
காக்கா கடி கடித்து 
ஒரு தேன் மிட்டாய்க்கு 
ஒரு யுத்தம் செய்திடவில்லை. 
உன் சடையிழுத்து 
வம்பு நான் செய்திடவுமில்லை 
என் தலையில்கொட்டி 
குறும்பு நீ செய்திடவுமில்லை 
உன் விரல்பிடித்து நான் 
தமிழ் எழுத வைக்கவுமில்லை 
உன் குரல் பிடித்து 
நான் மெய்மறந்ததுமில்லை 
ஒரு தாய் வயிற்றில் 
நீயும் நானும் பிறக்கவுமில்லை 
ஆனாலும் 
நீயும் நானும் 
அண்ணன் - தங்கை. 

எங்கோ பிறந்தோம் 
எங்கோ வளர்கிறோம். 
தமிழை படித்தோம் 
எழுத்தை பிடித்தோம் 
கவிதை எழுதினோம் -அன்பு 
காவியம் படைத்தோம் 

கண்ணில் மணி போல 
மணியில் நிழல் போல 
அண்ணன் தங்கையாய் 
உறவுக்கொண்டோம். 

என் இதயத்தாளில் 
நீ எப்போது எழுதினாய் 
” தங்கை” என்று 

உன் இதயப்புத்தகத்தில் 
நான் எப்போது அச்சிட்டேன் 
“ அண்ணா “ என்று 

மின்னலாய் வந்தாய் -அன்பு 
மழைப்பொழிந்தாய் 
கானல் நீராய் போகிறாய். 


என்னையே என்னை 
சமாதானப்படுத்தி கொள்கிறேன். 
இதோ எம் 
செவியில் ஒரு செய்தி 
”நீங்கள் தொடர்புக்கொள்ளும் 
கவிஞர் தொடர்பு எல்லைக்கு 
அப்பால் இருக்கிறார். “ 

தொடர்ந்து முயற்சிக்கிறேன் 
மீண்டும் நீ என் கவிதை 
தொடர்புக்குள் வருவாய் 
என்ற எதிர்ப்பார்ப்போடு...! 


மதுரை




மது உண்ட வண்டென தமிழ் உண்ட புலவர் உரை இடமோ 
சங்கத்தே உரையுடன் பொழியும் மதுரைத்தமிழ் கவிதை தலமோ 
பொழியும் மதுத்தமிழ் மழைஎலாம் உரைந்து கிடத்தலாலோ 
ஆளும் மதுரவிழியில் சொக்கி (ஈசன்) உரைந்து நின்ற இடமோ இது !

வேட்டையாடப்படும் விலங்காக

னது விருப்பம் 
என்பது உனதல்ல 
உன் குடும்பத்தினர் 
விருப்பமே உன் விருப்பம் 

பெண்ணே, 
அவன் உனைப் பெற்றவனாக இருக்கலாம், 
பெண்ணே, 
அவன் உன் உடன் பிறந்தவனாக இருக்கலாம் 
உனது விருப்பமும் 
அவர்கள் விருப்பமும் 
வேறு வேறானால் 
வேட்டையாடப்படும் விலங்காக 
எறிந்து கொள்வார் உன்னை! 

கர்ப்பிணியா நீ ! 
நீயாகத் தேர்ந்தெடுத்த 
ஒருவனோடு வாழ்வதா நீ! 
சாகடிப்பார் உன்னை ! 
நட்ட நடுத்தெருவில் 
காக்கிச்சட்டைகள் பார்த்திருக்க 
கற்களால் எறிந்து கொள்வார் உன்னை ! 

அடிபணிந்து போ ! 
அப்பனுக்கு,அண்ணனுக்கு, 
அவர்கள் காட்டும் 
ஒருவனுக்கு சொந்தமாகிப்போ! 
காட்டும் ஒருவன் 
கிழமோ,கீழ்த்தரமோ 
குடிகாரனோ, ஒழுங்கீனனோ 
எதைப் பற்றியும் 
கவலைப் படாதே ! 
அவர்கள் சுட்டும் 
ஒருவனோடு நீ வாழ வேண்டும்! 
இல்லையேல் நீ சாக வேண்டும் ! 

பாழாய்ப்போன சாதியால் 
செய்கிறான் சிலர் இங்கே ! 
சாதி இல்லை அங்கே 
இருந்தாலும் ஏன் இக்கொலை அங்கே! 

ஒன்றல்ல ! இரண்டல்ல ! 
ஓராண்டில் 
நூற்றுக்கணக்கில் 
கொல்லப்பட்ட பெண்கள்! 
சொந்த குடும்பத்து ஆண்களால் 
கவுரவக் கொலைகளாம் ! 
சொல்லக் கொதிக்கதடா நெஞ்சம் ! 

உனது விருப்பம் 
என்பது உனதல்ல 
உன் குடும்பத்தினர் 
விருப்பமே உன் விருப்பம் ! 

குடும்பம் எனும் 
அமைப்பு நொறுங்காமல் 
பெண்ணடிமை ஒழியாது ! 
வேலியாவது - வெங்காயமாவது 
என்று வெகுண்டெழாமல் 
பெண் வேதனைகள் தீராது ! 

(பாகிஸ்தானில் தனது குடும்பத்தாராலேயே கொல்லப்பட்ட பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணின் நினைவாக) .

Wednesday, 14 May 2014

அறுசீர் விருத்தம்

தமிழினைத்தான் தலையில் வைத்தாய் 
---தரத்தினைதான் சகத்தில் கேட்டாய் 
அமிழ்ததனைப் போலே பாக்கள் 
---அழகுதமிழ் தன்னில் செய்தாய் 

உடலினிலே தமிழை வைத்தாய் 
---ஊரதற்கு நன்மை செய்தாய் 
விடமதனைப் போக்கிட செய்யும் 
---விடியல்கள் கொண்டும் வந்தாய் 

கொள்ளியில் பொசுக்கும் தீயை 
---கொஞ்சுகின்ற கவியில் வைத்தாய் 
எள்ளியேதான் சிரிக்கும் பொய்யை 
---ஏற்றமுடைய தமிழால் கொய்தாய் 

கோரத்தை உலகில் நீக்க 
---கோலதமிழ் கொண்டே நீயும் 
வீரத்தோடு முழங்கி நின்றாய் 
---வீரனேநீ வாழ்க வாழ்க 

நேருக்கு நேராய் உன்னை 
---நோக்கமுடியா கோழை மக்கள் 
போருக்கே வராமல் நித்தம் 
---போர்வைக்குள் மறைவர் வெட்கி 

வீரமேஉன் அகத்தில் உண்டே 
---வீறுதமிழ் நாவில் உண்டே 
சூரனேஉன் முன்னால் நிற்க 
---பயந்துபோய் தலையைக் குனிவர் 

உந்தன்தந் தையும் தாயும் 
---தந்தாரே உன்போல் முத்தை 
செந்தமிழின் நாட்டிற் கேநீ 
---சிறுமைகள் அழிப்பாய் திண்ணம் 

கூற்றனையும் அழிக்கும் கூற்று 
---ஊற்றென்றே பெருகும் உன்னில் ! 
தூற்றனைதான் கொளுத்திப் நீயும் 
---மாற்றங்கள் செய்ய வாராய் !