உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம்
பெண்ணே,
அவன் உனைப் பெற்றவனாக இருக்கலாம்,
பெண்ணே,
அவன் உன் உடன் பிறந்தவனாக இருக்கலாம்
உனது விருப்பமும்
அவர்கள் விருப்பமும்
வேறு வேறானால்
வேட்டையாடப்படும் விலங்காக
எறிந்து கொள்வார் உன்னை!
கர்ப்பிணியா நீ !
நீயாகத் தேர்ந்தெடுத்த
ஒருவனோடு வாழ்வதா நீ!
சாகடிப்பார் உன்னை !
நட்ட நடுத்தெருவில்
காக்கிச்சட்டைகள் பார்த்திருக்க
கற்களால் எறிந்து கொள்வார் உன்னை !
அடிபணிந்து போ !
அப்பனுக்கு,அண்ணனுக்கு,
அவர்கள் காட்டும்
ஒருவனுக்கு சொந்தமாகிப்போ!
காட்டும் ஒருவன்
கிழமோ,கீழ்த்தரமோ
குடிகாரனோ, ஒழுங்கீனனோ
எதைப் பற்றியும்
கவலைப் படாதே !
அவர்கள் சுட்டும்
ஒருவனோடு நீ வாழ வேண்டும்!
இல்லையேல் நீ சாக வேண்டும் !
பாழாய்ப்போன சாதியால்
செய்கிறான் சிலர் இங்கே !
சாதி இல்லை அங்கே
இருந்தாலும் ஏன் இக்கொலை அங்கே!
ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓராண்டில்
நூற்றுக்கணக்கில்
கொல்லப்பட்ட பெண்கள்!
சொந்த குடும்பத்து ஆண்களால்
கவுரவக் கொலைகளாம் !
சொல்லக் கொதிக்கதடா நெஞ்சம் !
உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம் !
குடும்பம் எனும்
அமைப்பு நொறுங்காமல்
பெண்ணடிமை ஒழியாது !
வேலியாவது - வெங்காயமாவது
என்று வெகுண்டெழாமல்
பெண் வேதனைகள் தீராது !
(பாகிஸ்தானில் தனது குடும்பத்தாராலேயே கொல்லப்பட்ட பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணின் நினைவாக) .
No comments:
Post a Comment